புனித ஜார்ஜியாரை நோக்கி செபம்
*புனித ஜார்ஜியாரை நோக்கி செபம்*
அனைத்திற்கும் ஆதாரமாக இறைவனுக்கு மிகவும் விருப்பமுள்ளவருமாய், கிறிஸ்தவ நெறிகளுக்கு காவலருமாய், எங்களுக்கு துணையும் பாதுகாவலருமாய் எங்கள் நடுவே எழுந்தருளி இருக்கும் புனித ஜார்ஜியாரே! நீர் கடவுள் மேல் உண்மையான நம்பிக்கையும், அன்பும் கொண்டதால் அவர் உம்மேல் அன்பும் கருணையும் இரக்கமும் காட்டினாரே. மனிதரை கொன்று தின்று வந்த நாகப்பறவை வடிவில் உள்ள அசுத்த ஆவியை வெண் குதிரையின் மேல் அமர்ந்து ஈட்டியால் குத்திக் கொன்று, வெற்றிமாலை சூடினீரே. தியோக்கிலேசியனின் கட்டளைகளுக்கு அஞ்சாமல் கிறிஸ்தவத்தை எல்லா மக்களுக்கும் அறிவித்தீரே. மன்னனின் கொடிய கட்டளைகளை விசுவாசம் என்னும் சம்மட்டியால் அடித்து நொறுக்கி மன்னனால் மூன்று முறை கொல்லப்பட்டு, கடவுளின் அருளால் மும்முறையும் உயிர்பெறவும் வரம் பெற்றீரே! நீர் விண்ணரசு போய் சேரும் காலம் நெருங்கி வரவே தியோக்கிலேசியன் உமது தலையை வெட்டவும், உமது ஆன்மாவை வானதூதர்கள் புடைசூழ திருக்கரங்களில் ஏந்தி கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்கவும், விண்ணரசில் வேதசாட்சி முடிசூட்டப்படவும், அன்று முதல் இன்றுவரை உமது கல்லறையைத் தேடி வருபவர்கள் புதுமைகள் பெற்று வரவும் கிறிஸ்துவினால் வரம் பெற்றீரே!
ஆ! எங்கள்மேல் அன்பும் இரக்கமும் கொண்டு எங்கள் நடுவே இருக்கும் புனித ஜார்ஜியாரே! நாங்கள் கிறிஸ்துவில் நம்பிக்கையோடு வாழவும் எங்களுக்கு ஏற்படும் பலவித நோய்களிலிருந்தும் பஞ்சம், பசி, தீய ஆவியின் செயல் பாடுகளிலிருந்தும் எங்களை காப்பாற்றும். நாங்கள் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து சீரும் சிறப்புமாய் வாழவும், கடல் கடந்தும், வெளியூர்கள் சென்று தொழில்கள் செய்து வரும் உமது மக்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வாழவும். இறுதி திருவருட்சாதனம் பெற்று விண்ணரசின் மகிமையை உம்முடன் சேர்ந்து கண்டடைய, உமது திருப்பாதத்தில் மண்டியிட்டு வேண்டுகிறோம். தஞ்சம் என்று உமது உறைவிடத்தை தேடி வந்தோம். இரக்கத்துடன் எங்களைப் பாரும்! கருணைக் கடலே, தவிப்பவர்களுக்குத் தடாகமே! தணித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். வறுமை, நோய் முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். உமது திருசுரூபத்தை பார்த்து ஆறுதல் அடைய முழு நம்பிக்கையோடு ஓடி வந்தோம். எங்கள் நம்பிக்கை மறுக்கப்படுமோ! எங்கள் யாத்திரை பலனற்றதாய் போகுமோ! நீர் ஞானத் தந்தை என்பதை எங்களுக்கு காண்பியும். தாய் தன் பிள்ளையை மறந்தாலும், மக்களை மறக்காத இறைவனிடத்தில் நாங்கள் கேட்கும் செபங்களைக் கேட்டு தயவாய் எங்களுக்கு பெற்று தாரும். ...............................................(தேவைகளை கேட்கவும்) நாங்கள் உமது வழியாய் இறைவனிடம் கேட்கும் வேண்டுதல்களை நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கையோடு எல்லாம் வல்ல நம் இறைவனிடம் எங்களுக்காக மன்றாட வேண்டுமென்று உம்மை பார்த்து கெஞ்சி கேட்கிறோம்.
*ஆமென்.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Comments
Post a Comment